இஃது, "நீட்டம் வேண்டின்" (நூன்மரபு:6) என்பதற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்-( அளபெடை யோசையாகச் சொல்லாதொழியில்) குன்றுவதான ஓசையையுடைய அவ்வளபெடை எழுத்தானாய மொழிக்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும், (அவை யாவையெனின்,) நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்து- நெட்டெழுத்துக்களின் பின்னாக (அவற்றிற்குப் பிறப்பானும் புணர்ச்சியானும் ஓசையானும்) இனமொத்த குற்றெழுத்துக்கள். எ - டு: ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஓஒ என வரும். ஈண்டு மொழியென்றது, அவ்வளபெடை எழுத்து ஒரு பொருள் உணர்த்தி ஓரெழுத் தொருமொழியாய் நிற்கும் நிலைமையினை. இவையும் மொழிமேற் காணப்படுதலிற் சார்பிற்றோற்றத்து எழுத்து எனப்படுமா லெனின், பெரும்பான்மையும் அம்மொழிதானே அவ்வெழுத்தாய் வருதலானும், அம்மொழி நிலைமை ஒழிய வேறெழுத்தாகவும் சொல்லப்படுதலானும், அவ்வாறு ஆகாதென்பது. சிறுபான்மையும் அம்மொழிதானே எழுத்தாய் வாராதெனக் கொள்க. எ - டு: எருதுகாலுறாஅது என்றாற் போல்வன. (8)
|