3. குற்றுகரப் பொதுப் புணர்ச்சி

நெடிற்றொடர், உயிர்த்தொடர்

412.ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும்
வேற்றுமை யாயின் ஒற்றிடை இனமிகத்
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி.

இஃது, மேற்கூறிய ஆறினுள்ளும் முன் நின்ற இரண்டிற்கும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்றது.

(இ-ள்) ஈர் எழுத்து மொழியும் உயிர்த் தொடர் மொழியும்-ஈர் எழுத்து ஒரு மொழிக் குற்றியலுகர ஈறும், உயிர்த்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும் , வேற்றுமை ஆயின் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் ; இன ஒற்று இடைமிக வல்லெழுத்து மிகுதி தோற்றம் வேண்டும்-இனமாகிய ஒற்று இடையிலே மிக வல்லெழுத்து மிகுதி தோற்றி முடிதல் வேண்டும்.

எ - டு : யாட்டுக்கால் ; செவி, புறம் எனவும் ; முயிற்றுக்கால் ; சினை , தலை , புறம் எனவும் வரும்.

`தோற்றம்' என்றதனால் , இவ்விரண்டும் (ஏனைக்கணத்து) இயல்பு கணத்து முடிபு கொள்க.

யாட்டுஞாற்சி, முயிற்றுஞாற்சி ; நீட்சி ,மாட்சி , யாப்பு, வலிமை , அடைவு ,ஆட்டம் என வரும்.

(6)