இஃது, பின் நின்ற இரண்டிற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் - வன்றொடர் மொழிக் குற்றியலுகர ஈறும் மென்றொடர் மொழிக் குற்றியலுகர ஈறும், வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகும் - (வருமொழியாய்) வந்த வல்லொற்று இடையிலே மிக்கு முடியும்;மெல்லொற்று தொடர்மொழி மெல்லொற்று எல்லாம் - (அவ்விரண்டு ஈற்றினுள்) மெல்லொற்றுத் தொடர்மொழிக் (கண்நின்ற) மெல்லொற்றெல்லாம் , இறுதி வல்லொற்று கிளை ஒற்று ஆகும் - இறுதி வல்லொற்றும் ஆய் முடியும். எ - டு : கொக்குக்கால் ; சிறகு, தலை, புறம், எனவும்; குரக்குக்கால்; செவி, தலை, புறம் எனவும் ; எட்குக் குட்டி;1 செவி, தலை, புறம் எனவும் வரும். `வந்த' என்றதனால் , இவ்விரண்டிற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கு எய்தியவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கொக்கின்கால், குரங்கின்கால் என வரும். `எல்லாம்' என்றதனால், பறம்பிற்பாரி என்றாற் போல்வன மெல்லொற்றுத் திரியாமையும் கொள்க. `ஒற்று' என்ற மிகுதியான் , இயல்புகணத்துக் கண்ணும் குரக்கு ஞாற்சி; நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை,அடைவு, ஆட்டம் என மெல்லொற்றுத் திரிதலும் கொள்க. 1.கொக்குக்கால்- வன்றொடர்க் குற்றியலுகரம் வந்த வல்லெழுத்து மிக்கு முடிந்தது. குரங்குக்கால் - மென்றொடர்க் குற்றியலுகரம் வந்த வல்லெழுத்து மிக்கு முடிந்தது. குரக்குக்கால் மென்றொடரின் இடையில் நின்ற மெல்லொற்று இறுதி வல்லொற்றாய்த் திரிந்தது. எட்குக்குட்டி. மென்றொடரின் இடையில் நின்ற மெல்லொற்று இன வல்லொற்றாய்த் திரிந்தது.(9)
|