3. குற்றுகரப் பொதுப் புணர்ச்சி

நெடிற்றொடர்; வன்றொடர்

418.ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும்
அம்மிடை வரற்கும் உரியவை உளவே
அம்மர பொழுகு மொழிவயி னான.

இஃது, ஈரெழுத்து ஒரு மொழிக்கும் வன்றொடர் மொழிக்கும் எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

(இ-ள்) ஈர் எழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் - ஈரெழுத்து ஒருமொழிக் குற்றியலுகரமும் வன்றொடர் மொழிக் குற்றியலுகரமும், அம் இடை வரற்கும் உரியவை உள- (முன் முடித்துப்போந்த முடிபுகளன்றி) அம்முச்சாரியை இடைவந்து முடித்தற்கு உரியனவும் உள.(யாண்டானின்,) அம் மரபு ஒழுகும் மொழிவயின் ஆன - அவ் இலக்கணம் நடக்கும் மொழியிடத்து.

எ - டு : ஏறங்கோள், வட்டம்போர் என வரும்.

`உள' என்றதனால், தெங்கங்காய்,பயற்றங்காய் என வன்றொடர் அல்லனவற்றிற்கு அம்(முப்) பேறு கொள்க.

`அம்மரபொழுகும்' என்றதனால், அரசக்கன்னி முரசக்கடிப்பு1 என அக்குப்பேறும் கொள்க.

இன்னும் அதனானே, இருட்டத்துக் கொண்டான் என்னும் அத்துப் பேறும் கொள்க.

இன்னும் அதனானே, மயிலாப்பிற் கொற்றன் , பறம்பிற்பாரி என இன்பேறும் கொள்க.

(12)

1.அரசக்கன்னி, அரச வாழ்க்கை முதலிய தொடர்களின் இடையில் வந்துள்ளது. அக்குச் சாரியை என்பதைவிட அகரச்சாரியை என்பதே பொருத்தமாம்.