இஃது, மேலதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. ஐ ஒள என்னும் ஆ ஈர் எழுத்திற்கு- (ஒத்த குற்றெழுத்து இல்லா) ஐ ஒள என்று சொல்லப்படும் அவ்விரண்டெழுத்திற்குமுன், இகரம் உகரம் இசை நிறைவு ஆகும் -(ஈகாரம் ஊகாரங்கட்கு ஒத்த குற்றெழுத்தாகிய ) இகர உகரங்கள் (அக்குன்றிசை மொழிக்கண் நின்று) ஓசையை நிறைப்பனவாகும். எ - டு: ஐஇ, ஒளஉ என வரும். ஐகாரத்திற்கு இகரமும் ஒளகாரத்திற்கு உகரமும் என நிரனிறையாகக் கொள்க. இத்துணையும் நூன்மரபின் ஒழிபு. (9)
|