4. குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி

வினாப்பெயர், சுட்டுப்பெயர்

423.யாதென் இறுதியுஞ் சுட்டுமுத லாகிய
ஆய்த இறுதியும் உருபியல் நிலையும்.

இஃது, ஈரெழுத்து ஒரு மொழியுள் ஒன்றற்கும் சுட்டுமுதல் ஆய்தத் தொடர் மொழிக்கும் வேறு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) யாது என் இறுதியும் சுட்டுமுதல் ஆகிய ஆய்த இறுதியும் - யாது என்னும் ஈறும் சுட்டு முதலாகிய ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், உருபு இயல்நிலையும் - உருபுப் புணர்ச்சியின் (கண்ணே) நின்று அன்பெற்று, சுட்டு முதல் மொழிகள் ஆய்தம் கெட்டு முடியும்.

எ - டு : யாதன் கோடு, அதன் கோடு, இதன் கோடு, உதன் கோடு1 என வரும்.

(17)

1.ஆய்தங்கெடா முன்னே அன்னின் அகரத்தைக் குற்றிகரத்தின்மேல் ஏற்றுக; ஆய்தங் கெட்டால் அது முற்றுகரமாய் நிற்றலின்.(நச்.)