மொழி மரபு

3.எழுத்துக்கள் தொடர்ந்து மொழியாதல்

ஓரெழுத்தொருமொழி

43.நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி.

இஃது, எழுத்தினால் மொழியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நெட்டெழுத்து ஏழும் - நெட்டெழுத்தாகிய ஏழும் ஓர் எழுத்து ஒரு மொழி- ஓர் எழுத்தானாகும் ஒரு மொழியாம்.

எ - டு: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என வரும்.1

இதுவும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது. ஒளகாரத்தில் உயிர் மெய்யினையே கொள்க. `ஏழும்' என்பதன் உம்மை2 விகாரத்தால் தொக்கது.

(10)

1. எடுத்துக்காட்டு : ஆ, ஈ, ஊ, ஏ ,ஐ , ஓ என வரும். ஒளகாரம் உயிர்மெய்க்கண்ணல்லது வராது. ஊ என்பது தசை. இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் விதி, கா, தீ பூ சே தை கோ கௌ என வரும். இவை தம்மையுணர நின்ற வழி எழுத்தாம். இடை நின்று பொருளுணர்த்தியவழிச் சொல்லாம். நெட்டெழுத்தேறிய மெய் நெட்டெழுத்தாயும் குற்றெழுத்தேறிய மெய் குற்றெழுத்தாயும் நிற்றலேயன்றி மெய்க்கு நெடுமையும் குறுமையும் இன்மை உணர்க.

(நச்)

2. உம்மை முற்றுப் பொருள்பட நின்றது.