4. குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி

அவற்றிற்கு நிலையொழிச் செய்கை

430.அந்நான் மொழியுந் தந்நிலை திரியா,

இஃது, மேலனவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.

(இ-ள்) அ நால் மொழியும் (சுட்டு முதல் மூன்றும் யாமுதல் மொழியுமாகிய) அந் நான்கு மொழியும், தம் நிலை திரியா-தம் மெல்லொற்று நிலை திரிந்து வல்லொற்று ஆகாது முடியும்.

`தந்நிலை' என்றதனால், மெல்லொற்று திரியாது மிக்கு முடிவன பிறவும் கொள்க.

எ - டு : அங்குக்கொண்டான், இங்குக்கொண்டான், உங்குக்கொண்டான், எங்குக்கொண்டான் ; சென்றான், தந்தான், போயினான் என வரும்.

`யாமொழி' என்னாது `வினா' என்றதனால், பிற இயல்பாய் முடிவனவும் கொள்க. முந்து கொண்டான், பண்டு கொண்டான், இன்று கொண்டான், அன்று கொண்டான் என வரும்.

(24)