இஃது , மென்றொடர் மொழியுள் ஒரு வினைக்குறிப்பு மொழிக்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) உண்டு என் கிளவி உண்மை செப்பின் - உண்டு என்னும் சொல் ( உண்டு என்னும் தொழில் ஒழிய ) உண்மை என்னும்1 பண்பு உணர நிற்கும் இடத்து, முந்தை இறுதி மெய்யொடும் கெடுதலும் மேல் ஒற்று ளகாரம் ஆதலும்- முற்பட்ட ஈற்றுக் குற்றியலுகரம் (தான் ஏறி நின்ற) மெய்யொடும் கெடுதலும் அதற்கு மேல் நின்ற ணகார ஒற்று ளகாரம் ஆதலுமாகிய , ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்து - அம்முறைமையுடைய இரண்டினையும் உரித்தாதலும் உடைத்து, வல்லெழுத்து வருங்காலை - வல்லெழுத்து முதல்மொழி வருங்காலத்து. வல்லெழுத்ததிகாரம் வாரா நிற்ப, (`வல்லெழுத்து வரூஉங் காலை' என்பதனான்) இவ் இருமுடிபும் உள்ளது. பகர முதல்மொழி வந்தால், மற்றை மூன்று எழுத்தின்கண்ணும் ஈறு கெடாதே நின்று முடியும் என்று கொள்க. இன்னும் அதனானே, இயல்பு கணத்து இறுதி கெடாதே முடிதல் கொள்க. எ - டு : உள் பொருள், உண்டு பொருள் எனவும் ; உண்டு காணம், உண்டு சாக்காடு, உண்டு தாமரை எனவும்; உண்டு ஞாண்; நூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும் வரும். `உள்பொருள்' என்பது பண்புத்தொகை முடிபு அன்றோ எனின் ; அஃது ஓசை ஒற்றுமைபடச் சொல்லும் வழியது:இஃது, ஒசை இடையறவுபடச் சொல்லும் வழியது போலும். 1.பண்பு : ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி, அது கெடுந் துணையும் உண்டாய் நிற்கின்ற தன்மை.(25)
|