இஃது, அப் பெருந்திசையோடு கோணத்திசை புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று. திரிபு வேறு கிளப்பின் - (அப் பெருந்திசைகளோடு) கோணத்திசைகளை வேறாகப் புணர்க்கும் இடத்து, ஒற்றும் இறுதியும் கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் - அவ் உகரம் ஏறி நின்ற) ஒற்றும் அவ் ஈற்று உகரமும் கெட்டு முடிதல் வேண்டுமென்று சொல்லுவர் புலவர், தெற்கொடு புணரும் காலை - தெற்கு என்னும் திசையோடு புணரும் காலத்து, ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும் - (அதன்கண் நின்ற) ளகார ஒற்று(த்தன் வடிவு) திரிந்து னகாரமாய் முடியும். `திரிந்து' என்றதனான், வடக்கு என்பதன்கண் இடைநின்ற ககர ஒற்றுக் கெடுக்க. எ - டு : வடகிழக்கு, வடமேற்கு ; தென்கிழக்கு,தென்மேற்கு என வரும். `வேறு' என்றதனால், திசைப்பெயரோடு பொருட்பெயர்க்கும் இவ்விதி கொள்க.வடகடல், வடவரை என வரும். `மெய்' என்றதனான், அத்திசைப்பெயரோடு பொருட்பெயர் புணருமிடத்து இறுதியும் முதலும் திரிந்து முடிவனவெல்லாம் கொள்க.கீழ் கூரை, மேல் கூரை என வரும். 1.(பாடம்) உகரமும் (நச்.) (27)
|