5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

பத்தொடு எண்ணுப்பெயர்

434.ஒற்றுமுத லாக எட்ட னிறுதி
எல்லா எண்ணும் பத்தன் முன்வரின்
குற்றிய லுகரம் மெய்யொடும் கெடுமே
முற்றஇன் வருஉம் இரண்டலங் கடையே.

இஃது, இவ்வீற்று எண்ணுப்பெயரோடு எண்ணுப்பெயருக்கு முடிபு கூறுகின்றது.

ஒன்று முதலாக எட்டு என் இறுதி எல்லா எண்ணும் - ஒன்று என்னும் சொல் முதலாக எட்டு என்னும் சொல் இறுதியாகவுள்ள எல்லா எண்ணுப்பெயரும், பத்தன் முன்வரின் - பத்து என்னும் எண்ணுப்பெயர் முன் வரின், குற்றிலுகரம் மெய்யொடும் கெடும்-(அப் பத்து என்னும் சொல்லிற்) குற்றியலுகரம்(தான் ஏறி நின்ற) மெய்யொடும் கெட்டு முடியும். இரண்டு அலம் கடை முற்ற இன் வரும்- இரண்டாம் எண்ணுப்பெயர் அல்லாத எண்ணுப்பெயரிடத்து முடிய முன் வந்து புணரும்.

எ - டு : பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு என வரும்.

நிலைமொழி முற்கூறாததனால் பிறமொழியும் அவ் இன்பேறு கொள்க. ஒன்பதின்பால், ஒன்பதின்கூறு என வரும்.

`முற்ற' என்றதனான், மேல் எடுத்தோத்தானும் இலேசானும் இன்பெற்றவழி பின், பதிற்றொன்று, பதிற்றிரண்டு என்றாற்போல முடிபுகள் வேறுபட வருவன வெல்லாம் கொள்க.

(28)