5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

பத்தின் முன் இரண்டு

435.பத்தனொற் றுக்கெட னகாரம் இரட்டல்
ஒத்த தென்ப இரண்டுவரு காலை.

இஃது, மேல் இன் பெறாதென்று விலக்கிய அதற்குப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

பத்தன் ஒற்று கெட னகாரம் இரட்டல் - பத்து என்னும் சொல்லில் நின்ற தகர ஒற்றுக் கெட னகர ஒற்றுவந்து இரட்டுதல், ஒத்தது என்ப - பொருந்திற்று என்று சொல்லுவர் (புலவர்) , இரண்டு வரு காலை - இரண்டு என்னும் எண் வரும் காலத்து.

எ - டு : பன்னிரண்டு என வரும்.

(29)