இஃது, எண்ணுப் பெயரோடு நிறைப்பெயரும் அளவுப்பெயரும் புணர்க்கின்றது. நிறையும் அளவும் வரூஉம் காலையும் - மேல் நின்ற பத்தென்பதன்முன் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வரும் காலத்தும், இன் என் சாரியை குறையாது ஆகும் -(அவ்) இன் என்னும் சாரியை குறையாது வந்து முடியும். எ - டு : பதின்கழஞ்சு, தொடி எனவும் ; பதின்கலம் ; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும் வரும். `குறையாதாகும்' என்றதனால், பத்து என்பதன் முன்னர்ப் பொருட்பெயர்க்கு வரு முடிபும் கொள்க. பதின்றிங்கள், பதிற்றுமுழம், பதிற்றுவேலி, பதிற்றிதழ் என வரும். (31)
|