இஃது, எண்ணுப் பெயரோடு எண்ணுப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது. ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் நின்ற பத்தன் ஒற்று கெட ஆய்தம் வந்து இடைநிலையும் இயற்கைத்து என்ப - ஒன்று முதலாக ஒன்பது ஈறாகச் சொல்லப்படுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர் (வருமொழியாய் வந்து) நின்ற பத்து என்னும் சொல்லினது தகர ஒற்றுக் கெட ஆய்தமானது வந்து இடை(யில்) நிலைபெறும் இயல்பையுடைத்தென்று சொல்லுவர் (புலவர்), ஆறன் இறுதி அல்வழி குற்றியலுகரம் கூறிய இயற்கை- (அவற்றுள்) ஆறு என்னும் ஈறு அல்லாத இடத்துக் குற்றியலுகரம் மேற்கூறிய இயற்கை(யாய்) மெய்யோடும் கெட்டு முடியும். எ - டு : ஒருபஃது, எருபஃது என ஒட்டுக. `வந்து' என்றதனால், ஆய்தமாய்த் திரியாது கெட்டு ஒருபது என்றுமாம். (32)
|