5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`மூன்று' `ஆறு'

441.மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்
மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும்.1

இதுவும் அது.

மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும் -மூன்று என்னும் எண்ணும் ஆறு என்னும் எண்ணும் நெடு முதல் குறுகி முடியும், மூன்றன் ஒற்று பகாரம் ஆகும் - மூன்று என்னும் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று பகர ஒற்றாய் முடியும்.

எ - டு :முப்பஃது (அறுபஃது) என வரும்.

(35)

1.இதனை இரண்டு நூற்பாவாகக்கொள்வர் நச்சினார்க்கினியர்.