5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`ஒன்பது' என்னும சொல்

445.1ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகாரம் ஆகும்.

இதுவும் இது.

ஒன்பான் ஒகர மிசை தகரம் ஒற்றும் (நிலைமொழியாகிய) ஒன்பது என்னும் சொல்லின் ஒகரத்திற்கு மேலாகத்தகரம் ஒற்றாய் மிக்கு வரும், முந்தை ஒற்று ணகாரம் இரட்டும்- முன் சொன்ன ஒகரத்தின் முன்னர் னகர ஒற்று இரண்டு ணகார ஒற்றாய் மிக்கு வரும், பத்து என் கிளவி பகரம் ஆய்தம் கெட ஊகாரக் கிளவி நிற்றல் வேண்டும் - ( வருமொழியாகிய) பத்து என்னும் சொல் தன்கண் பகரமும் ஆய்தமும் கெட ( நிலைமொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர்) ஊகாரமாகிய எழுத்து நிற்றல் வேண்டும் ; ஒற்றிய தகரம் றகாரம் ஆகும். (வருமொழியாகிய பத்து என்பதன் ஈற்றதன்மேல் ஏறிய உகரம் கெடாது பிரிந்து நிற்ப) ஒன்றாய் நின்ற தகரம் றகார ஒற்றாகும் .

இஃது, ஒன்பதும் பத்தும் என நின்றால் முடியற்பால (இன்ன) வென்பது. பகர ஆய்தம் என்னாத முறையன்றிய கூற்றினான். நிலைமொழிக்கண் பகரக்கேடும் கொள்க. குற்றயலுகரமும் அஃது ஏறிய மெய்யும் முன்னர் மாட்டேற்றாற் கெட்டன.

எ - டு : தொண்ணூறு என வரும்.

(39)

1.இந்நூற்பா ஒன்பது + பஃது = தொன்னூறு என முடிக்கின்றது. இம் முடிவு எவ்வகையிலும் பொருந்தாத தொன்றாம். ஒன்பது என்னும் எண்ணுக்குப் பழம்பெயர் தொண்டு என்பது. ` தொண்டு தலையிட்ட ' (தொல். 1358) என்று ஆசிரியரும், தொண்டுபடு திவவு (மலைபடு. 21) என்று பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனாரும் கூறுதல் காண்க. தொண்டு என்னும் சொல் தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கற்றுப் போய் விட்டது. அவர் காலத்திற்குமுன் தொண்டு தொண்பது தொண்ணூறு தொள்ளாயிரம் என்பன முறையே, 9, 90, 900,9000 என்னும் எண்களைக் குறிக்கும் பெயர்களாயிருந்தன. தொண்டு என்னும் ஒன்றாமிடப்பெயர் வழக்கறவே, தொண்டு என்னும் பத்தாமிடப்பெயர் ஒன்றாமிடத்திற்கும் தொண்ணூறு என்னும் நூறாமிடப் பெயர் பத்தாமிடத்திற்கும் , தொள்ளாயிரம் என்னும் ஆயிரமிடாப் பெயர் நூறாமிடத்திற்குமாக வழங்கத் தலைப்பட்டன . தொண்பது என்னும் பெயர் முறையே தொன்பது ஒன்பது என மருவிற்று. ஆயிரத்தாமிடப்பெயர் நூறுமிடத்திற்கு வழங்கவே 9000 என்னும் எண்ணைக் குறிக்க ஒன்பது என்னும் பெயருடன் ஆயிரம் என்னும் பெயரைச் சேர்க்கவேண்டிய தாயிற்று. முதற் பத்து எண்ணுப்பெயர்களில் ஒன்பது என்பதைத் தவிர , மற்றவையெல்லாம் ஒரு சொல்லா யிருப்பதையும் , ஒன்பது என்பது இரு சொல்லாய்ப் பது (பத்து) என்று முடிவதையும் , தொண்ணூறு என்பது நூறு என்றும் தொள்ளாயிரம் என்பது ஆயிரம் என்றும் முடிவதையும் நோக்குக. தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என்னும் சொல்லுக்குப் பொருந்தப் புகலும் முறைபற்றி ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவர் சிலர். அதுவே அதன் பொருளாயின் தொண்ணூறு தொள்ளாயிரம் என்பனவற்றிற்கும் அப் பொருள் ஏற்கவேண்டும். அங்ஙனம் ஏலாமையின் அது போலியுரையென மறுக்க. ஆகவே தொண்டு + பத்து = தொண்பது ; தொண்டு + நூறு = தொண்ணூறு ; தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பதே முறையென்றும் , தொண்டு என்னும் எண்ணுப் பெயர் வழக்கற்றதினால் அதன்மேலிடப் பெயர்கள் மூன்றும் ஒவ்வோரிடமாய்த் தாழ்ந்துவந்து வழங்கின என்றும் அறிந்து கொள்க.

(பாவாணர்.)