இஃது, எழுத்தினான் ஆகும் மொழிகளின் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. ஓர் எழுத்து ஒரு மொழி - ஓரெழுத்தான் ஆகும் ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி - இரண்டெழுத்தான் ஆகும் ஒருமொழி - இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி - இரண்டிறந்து பலவற்றான் இசைக்கும் தொடர்மொழி , உளப்பட மூன்று உட்பட்ட மொழிகளின் நிலைமை மூன்றாம் , தோன்றிய நெறி - அவை தோன்றிய வழக்கு நெறிக்கண். எ - டு: ஆ, மணி , வரகு , கொற்றன் எனவரும்.1 (12)
1. குரவு, அரவு, மூவெழுத்தொருமொழி ; கணவிரி, நாலெழுத்தொருமொழி, அகத்தியனார், ஐயெழுத்தொருமொழி, திருச்சிற்றம்பலம் ஆறெழுத்தொருமொழி, பெரும்பற்றப்புலியூர் ஏழெழுத்தொருமொழி, ஓரெழுத்தொருமொழியும் தொடர்மொழியும் என்னாது ஈரெழுத்தொருமொழியும் ஓதினார் , சில பல என்னும் தமிழ் வழக்கு நோக்கி. (நச்)
|