இஃது, வேண்டா கூறி வேண்டியது முடித்தல் நுதலிற்று. ந ம வ என்னும் மூன்றொடு சிவணி அகரம் வரினும் . ( அளவுப்பெயர் நிறைப்பெயர்களில் மென்கணத்து இரண்டும் இடைக்கணத்து ஒன்றுமாகிய ) ந ம வ என்னும் மூன்றனோடும் பொருந்தி( உயிர்க்கணத்து) அகர முதல்மொழி வரினும் (உம்மையால் அவ் வுயிர்கணத்து ஒழிந்த உகரமும் கூறாத வல்லெழுத்துக்களும் வரினும்), எட்டன்முன் இயல்பு - எட்டென்ப தன் முன் (மேற்கூறி நின்ற விகாரமே விகாரமாக வேறோர் விகாரமின்றி) இயல்பாய் முடியும். எ - டு : எண்கலம் ; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; எண் கழஞ்சு; தொடி, பலம் எனவும் வரும். இவ் வேண்டா கூறலான், எண்ணகல் எனத் தொடர்மொழிக் கண் ஒற்றிரட்டல் கொள்ளப்பட்டது. `ஐந்து' `மூன்று' என்னும் இரண்டு சொற்களுக்கும் ஒத்த முடிபு. (44)
|