5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`மூன்று' `நான்கு' `ஐந்து' முன் வகர முதன்மொழி

452.மூன்ற னொற்றே வகாரம் வரும்வழித்
தோன்றிய வகாரத் துருவா கும்மே.

இதுவும் அது.

மூன்றன் ஒற்று வகாரம் வரும் வழி - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று வகர வருமொழி வரும் இடத்து, தோன்றிய வகாரத்து உருவு ஆகும் - வருமொழியாய வகரத்து உருவாய் முடியும்.

எ - டு : முவ்வட்டி, என வரும்.

`தோன்றிய' என்றதனான், முதல் நீண்டு வகர ஒற்றின்றி மூவட்டி என்றுமாம்.

இன்னும் அதனானே, முதல் நீளாது ஒற்றின்றி முவட்டி என்றுமாம்.

(46)