5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

அவற்றுள் `மூன்று' என்பதற்கு மேலும் ஒரு முடிபு

457.மூன்றன் முதனிலை நீடலும் உரித்தே
உழக்கென் கிளவி வழக்கத் தான.

இதுவும் அது.

மூன்றன் முதல் நிலை உழக்கு என் கிளவி வழக்கத்தான - மூன்று என்னும் எண்ணின்கண் முத(லி)ல் நின்ற எழுத்து உழக்கு என்னுங் கிளவியது வழக்கிடத்து , நீடலும் உரித்து - குறுகாது நீண்டு முடிதலும் உரித்து.

எ - டு : மூவுழக்கு என வரும்.

'வழக்கத்தான' என்றதனான், அகல் என்பதன்கண்ணும் இச்செய்கை கொள்க.

மூவகல் என வரும்.

(51)