இஃது, தனி மெய்களைச் சொல்லும் முறைநிலை இதுவென்பது உணர்த்துதல் நுதலிற்று. மெய்யின் இயக்கம் - தனி மெய்களினது இயக்கம் , அகரமொடு சிவணும் - அகரத்தோடு பொருந்தும்.1 எ - டு: "ட ற ல ள வென்னும் புள்ளி" (நூன்மரபு 23) என வரும். இஃது, மொழியிடை (நின்ற) எழுத்துக்கள் அன்மையின் நூன் மரபின் வைக்க வெனில் , தன்னை உணர்த்தாது வேறு பொருள் உணர்த்தும் சொல் நிலைபோல `டறலள' வென்றது உயிர்மெய்யை உணர்த்தாது தனிமெய்யை உணர்த்தலானும் ஒற்றினை உயிர்மெய்போலச் சொல்லுகின்ற வழுவமைதியிலக்கணத்தானும் மொழிமரபின்கண்ணதாயிற்றென உணர்க. (13)
1. இங்ஙனம் மெய்க்கண் அகரங் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரங் கலந்து நிற்குமென்பது ஆசிரியர் கூறாராயினார் , அந்நிலைமை தமக்கே புலப்படுதலாலும் பிறர்க்கு இவ்வாறு என உணர்த்துதல் அரிதாகலானுமென்று உணர்க . இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனி மெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது. `அகரமுதல ' என்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம் ; அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகம் என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும் கண்ணன் `எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே' எனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க. (நச்)
|