5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

அதன்கண் `ஒன்பது' என்னும் சொல்

463.ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே
முந்தை யொற்றே ளகாரம் இரட்டும்
நூறென் கிளவி நகார மெய்கெட
ஊஆ வாகும் இயற்கைத் தென்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகாரம் ஒற்றும்.

இதுவும் அது.

ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்து அற்று - ஒன்பது என்னும் சொல்லின் முதல் நின்ற ஒகரம் மேல் (பத்தென்பதனோடு புணரும் வழிக் ) கூறியவாறு போல் ஒகர மிசைத் தகர ஒற்று மிகும் , முந்தை ஒற்று ளகாரம் இரட்டும் - அவ் வொகரத்தின் முன்னின்ற (னகர) ஒற்று இரண்டு ளகர ஒற்றாம் , நூறு என் கிளவி நகார மெய் கெட ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப - (வருமொழியாகிய) நூறு என்னும் சொல்லும் நகாரமாகிய மெய் கெட ( அதன் மேல் ஏறிய) ஊகாரம் ஆகாரமாம் இயல்பையுடைத்து என்பர்(புலவர்), ஆ இடை இகாரம் ரகாரம் வருதல் - அம் மொழியிடை ஓரிகரமும் ரகாரமும் வரும். ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும் - இதற்கு ஈறாகிய குற்றியலுகரத்தினையும் அஃது ஏறி நின்ற ஒற்றினையும் கெடுத்து ஓர் மகரம் ஒற்றாய் வந்து முடியும்.

`மெய்' என்றதனான், நிலைமொழிக்கண் நின்ற பகரம் கெடுக்க.

எ - டு : தொள்ளாயிரம் என வரும்.

(57)