இதுவும் அது. ஆறன் மருங்கின் குற்றியலுகரம் ஈறு மெய் ஒழிய கெடுதல் வேண்டும் . ஆறாம் எண்ணின்கண் நின்ற குற்றியலுகரம் (தான் ஏறிய) மெய்யாகிய றகர ஒற்றுக் கெடாது நிற்ப (உகரமாகிய அவ்வீறு தானே) கெட்டு முடிதல் வேண்டும். எ - டு : அறாயிரம் என வரும். திரிந்ததன் திரிபது என்னும் நயத்தான் , ஆறன் மருங்கின் என்று ஓதப்பட்டது. ஆறு என்பது அறு எனக் குற்றியலுகரம் முற்றியலுகரமாக ஓதப்பட்டு நின்றமையின் அவ்வுகரக்கேடு ஓதப்பட்டது. ஈறு எனவும் மெய் எனவும் அவ்வுயிர் மெய்யைப் பிரித்துச் செய்கை ஓதினமையான் . அவ்வுயிர் மெய்யினை ஒற்றுமை நயத்தாற் குற்றயிலுகரம் என்று ஓதினானாகக் கொள்க. ஆறன் மருங்கின் ஈறு மெய்யொழியக் கெடும் என்னாது குற்றியலுகரம் என்றோதினமையான் , நெடுமுதல் குறுகாதே நின்று ஆறாயிரம் ஆம். இன்னும் அதனானே "ஆறா குவதே" (சொல்லதிகாரம் - வேற்றுமையியல் - சூத்திரம் 18.) என்றாற்போலப் பொருட் பெயர்க்கண் வருமுடிபும் கொள்க. மேல் மாட்டேற்றானே எண்ணாயிரம் என முடிந்தது. (63)
|