5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

நூறு முன் `ஒருபஃது' முதலியன

473.அவையூர் பத்தினும் அத்தொழிற் றாகும்.

இஃது , அந்நூறு என்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்கள் அடையடுத்தவழிப் புணருமாறு கூறுகின்றது.

அவை ஊர்பத்தினும் அத் தொழிற்று ஆகும் - (அந் நூறு என்பது) ஒன்று முதல் ஒன்பான்களான் ஊரப்பட்ட பத்தினோடு புணருமிடத்தும் அத்தொழிற்றாய் இன ஒற்று மிக்கு முடியும்.

எ - டு : நூற்றொருபஃது ; இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃது, எண்பஃது என வரும்.

`ஆகும்' என்றதனான், நிலைமொழியடையடுத்து வரும் முடிபும் கொள்க. ஒரு நூற்றொருபஃது என ஒட்டுக.

(67)