5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

நூறு முன் அளவுப்பெயர், நிறைப்பெயர்

474.அளவும் நிறையும் ஆயியல் திரியா
குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையும்
முற்கிளந் தன்ன என்மனார் புலவர்.

இஃது , அந்நூறு என்பதனோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது.

அளவும் நிறையும் ஆ இயல் திரியா - (அந்நூறு என்பதனோடு புணருமிடத்து) அளவுப் பெயரும் நிறைப்பெயரும் மேற்கூறிய இயல்பில் திரியாதே நின்று இனவொற்றுமிக்கு முடியும். குற்றியலுகரமும் வல்லெழுத்து இயற்கையும் முன் கிளந்த அன்ன என்மனார் புலவர் - (அவ்விடத்துக் குற்றியலுகரம் கெடாமையும் இன ஒற்று மிக்கு வன்றொடர் மொழியாய் நின்றமையான் வருமொழி) வல்லெழுத்து மிகும் இயல்பும் மேல் (வன்றொடர் மொழிக்குக்) கூறிய தன்மையவென்று சொல்லுவர் புலவர்.

எ - டு : நூற்றுக்கலம் ; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அசல், உழக்கு எனவும் ; கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.

"திரியா" என்றதனான், நூறு என்பது அடையடுத்த வழியும் இவ்விதி கொள்க.

ஒரு நூற்றுக்கலம், இருநூற்றுக்கலம் என ஒட்டுக.

(68)