5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

அவற்றின்முன் அளவுப்பெயர் நிறைப்பெயர்

477.அளவும் நிறையும் ஆயியல் திரியா.

இஃது, அவ்வொன்று முதலாகிய பத்தூர் கிளவி முன் அளவுப் பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது.

அளவும் நிறையும் ஆ இயல் திரியா - (அவ்வொன்று முதலாகிய பத்தூர் கிளவி முன் ) அளவுப்பெயரும் நிறைப்பெயரும் (மேல் ) ஆயிரத்தோடு புணரும் வழி முடிந்த இயல்பில் திரியாதே நின்று இன்பெற்று முடியும்.

எ - டு : ஒருபதின்கலம், இருபதின்கலம் ; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும் ; ஒரு பதின் கழஞ்சு ; தொடி, பலம் எனவும் கொள்க.

`திரியா' என்றதனான் , ஒருபதிற்றுக்கலம் என்னும் முடிபிற்கு இன்னின் னகரம் இரட்டி றகரமாகலும் , ஒருபதினாழி என்னும் முடிபின்கண் வருமொழி நகரம் திரிந்தவழி நிலைமொழியின் னகரக் கேடும் கொள்க.

(71)