இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட்பெயரைப் புணர்க்கின்றது. முதல்நிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் ஞ ந ம தோன்றினும் ய வ வந்து இயையினும் - முதனிலை எண்ணாகிய ஒன்று என்னும் எண்ணின் முன் வல்லெழுத்து முதன்மொழி வரினும் ஞ ந ம க்களாகிய மெல்லெழுத்து முதன்மொழி வரினும் ய வ க்களாகிய இடையெழுத்து முதன்மொழி வந்து பொருந்தினும் , முதல்நிலை இயற்கை என்மனார் புலவர் - அவ்வொன்று முதல் ஒன்பான்கள் முன் எய்திய முடிபுநிலை எய்தி முடியும் என்று சொல்லுவர் புலவர். எனவே, வழிநிலை எண்ணாகிய இரண்டு முதலாகிய எண்கள் அம்முதனிலை முடிபாகிய விகாரம் எய்தியும் எய்தாதும் இயல்பாயும் முடியும். எ - டு : ஒருகல்; சுனை, துடி, பறை, ஞாண், நூல், மணி, யாழ், வட்டு என வரும். இருகல், இரண்டுகல்; சுனை, துடி; பறை, ஞாண், நூல், மணி, யாழ், வட்டு எனவும் ஒன்பதின் காறும் ஒட்டுக. ஒன்பதின்கல் எனச் சென்றதேனும் வழக்கின்மையின் ஒழிக்க. `நிலை' என்றதனான், மாட்டேற்றுக்கு ஏலாத ஞகர யகரங்களின் முடிபு கொள்ளப்பட்டது. (72)
|