இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட்பெயருள் உயிர் முதன்மொழி முடியுமாறும் மேற்கூறிய யகரம் வேறுபட முடியுமாறும் கூறுகின்றது. அதன் நிலை உயிர்க்கும் யா வருகாலையும் முதல் நிலை ஒகரம் ஓ ஆகும் - அவ்வொன்று முதல் ஒன்பான்களோடு புணருமிடத்து உயிர் முதன்மொழி வந்த இடத்தும் யா முதல் மொழி வந்த இடத்தும் முதல் நிலை எண்ணாகிய ஒன்று என்பதன்கண் ஒகரம் ஓகாரம் ஆம் , ரகரத்து உகரம் துவரக் கெடும் - (அவ்விடத்து) ரகரத்து உகரம் முற்றக்கெட்டு முடியும். எனவே, வழிநிலை யெண்களுள் உயிர்நிலை முதன்மொழி வந்த இடத்து முன் கூறியவாறே இருவாற்றானும் முடியும். எ - டு : ஓரடை, ஓராடை எனவும் ; இருவடை, இருவாடை,இரண்டடை ; இரண்டாடை எனவும் உயிர் முதல் மொழிகளை ஒட்டிக்கொள்க. யா முதல் மொழி ஓர் யாழ் என வரும். `துவர' என்றதனான், இரண்டு என்னும் எண்ணும் மூன்று என்னும் எண்ணும் செய்யுளகத்து ஈரசை எனவும் மூவசை எனவும் முதல் நீண்டு வேறுபட முடியுமாறு கொள்க. `அதனிலை' என்றதனான், முதனிலை நீளாதே நின்று உகரம் கெட்டு ஓரடை, ஓராடை ஓர்யாழ் என வரும் முடிபும் கொள்க. (73)
|