மொழி மரபு

4. எழுத்துக்களின் இயக்கம்

ஈரொற்றுடனிலை

48.யரழ என்னும் மூன்றுமுன் னொற்றக்1
கசதப ஙஞநம ஈரொற் றாகும்.

இஃது, ஈர் ஒற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ய ர ழ என்னும் மூன்று - ய ர ழ என்று சொல்லப்படுகின்ற மூன்றனுள் ஒன்று , முன் ஒற்ற - (குறிற்கீழும் நெடிற் கீழும்) முன்னே ஒற்றாய் நிற்ப (அவற்றின் பின்னே), க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்றாகும், க ச த ப க்களிலொன்றாதல் ங ஞ ந மக்களிலொன்றாதல் ஒற்றாய்வர அவை ஈரொற்றுடனிலையாம்.

எ - டு: வேய்க்குறை, வேய்ங்குறை. வேர்க்குறை, வேர்ங்குறை, வீழ்க்குறை, வீழ்ங்குறை, சிறை, தலை, புறம் என ஒட்டுக.

இவ்விதி மேல் ஈற்றகத்து உணர்ந்துகொள்ளப்படுமாலெனின் இது `ஈர்க்கு, பீர்க்கு' என ஒரு மொழியுள்ளும் வருதலானும் , இரண்டு மெய்க்கண்ணும் வருதல் விகாரமாதலானும் ஈண்டுக் கூறப்பட்டது . அஃதேல் இதனை நூன்மரபினகத்து மெய்ம்மயக்கத்துக்கண் கூறுக வெனின் , ஆண்டு வேற்றுமை நயம் கொண்ட தாகலின் ஈரொற்று உடனிலையாதல் நோக்கி ஒற்றுமைநயம்பற்றி ஈண்டுக் கூறப்பட்டது.

(15)

(பாடம் - நச்) 1. மூன்றும் ஒற்றக்.