5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

இரண்டு முதல் ஒன்பது எண்ணின் முன் `மா' என்னும் சொல்

480.இரண்டுமுத லொன்பான் இறுதி முன்னர்
வழங்கியல் மாவென் கிளவி தோன்றின்
மகர அளபொடு நிகரலு முரித்தே.

இஃது, இரண்டு முதல் ஒன்பான்கள் முன்னர் அளவு முதலிய மூன்றற்கும் உரிய மா என்பது புணருமாறு கூறுகின்றது.

இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் - இரண்டு முதலாக ஒன்பது ஈறாக சொல்லப்படுகின்ற எண்களின் முன்னர், வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் - வழக்கின் கண்ணே கிடக்கின்ற (விலங்கு மரம் முதலிய அல்லாத அளவு முதலியவற்றிற்குரிய) மா என்னும் சொல் தோன்றின், மகர அளபொடு நிகரலும் உரித்து - (இயல்பாய் முடிதலேயன்றி மேற்கூறிய) மண்டை என்னும் அளவுப்பெயரோடு ஒத்து வேறுபட முடிவனவும் பெறும்.

எ - டு : இரண்டுமா, இருமா, மூன்றுமா, மும்மா என ஒன்பதின்காறும் இவ்வாறு ஒட்டுக.

இரண்டு முதல் ஒன்பான் என்று எடுத்தமையின், ஒன்றற்கு ஒருமா என்னும் முடிபேயன்றி ஒன்றுமா என்னும் முடிபு இல்லையாயிற்று- இவற்றுள் மிக்க எண்ணோடு குறைந்த எண்வருங்கால் உம்மைத் தொகையாகவும், குறைந்த எண்ணோடு மிக்கது வரிற் பண்புத் தொகையாகவும் முடித்தார் என்க.

(74)