இஃது, லகார னகார செய்யுள் முடிபு கூறுகின்றது. ல ன என வரும் புள்ளி இறுதிமுன் - ல ன என்று சொல்ல வருகின்ற புள்ளியீற்றுச் சொல்முன், உம்மும் கெழுவும் உளப்பட பிறவும் - உம் என்னும் சாரியையும், கெழு என்னும் சாரியையும் உளப்படப் பிற சாரியையும், அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி செய்யுள் தொடர்வயின் மெய்பெற நிலையும் - அப் பெற்றிப்பட்ட மரபினையுடைய மொழியிடைத் தோன்றிச் செய்யுள் மொழிகளைத் தொடர்ந்து சொல்லும் இடத்து மெய்ம்மை பெற நிலைபெற்று முடியும், வேற்றுமை குறித்த பொருள் வயின் - வேற்றுமை குறித்த பொருட் புணர்ச்சிக்கண். எ - டு : "வானவரி வில்லுந் திங்களும், கல்கெழு கானவர் நல்குறு மகளே" எனவும், மாநிதிக் கிழவனும் போன்ம் எனவும்; கான்கெழுநாடு எனவும் வரும். `மொழியிடைத் தோன்றி' என்ற மிகையால், பிற ஈற்றுள்ளும் இச்சாரியை பெற்று முடிவன கொள்க. துறைகெழுமாந்தை, வளங்கெழு திருநகர் என வரும். `அன்னமரபின்' என்றதனால், சாரியை காரணமாக வல்லெழுத்துப் பெறுதலும், அது காரணமாக நிலைமொழியீறு திரிதலும், சாரியையது உகரக்கேடும், எகர நீட்சியும் கொள்க. பூங்கேழூரன், வளங்கேழ் திருநகர் என்று அவ்வாறு வந்தமையறிக. `மெய் பெற' என்றதனான், இச் சாரியைப் பேற்றின்கண் ஈற்று வல்லெழுத்து வீழ்க்க. (75)
|