இஃது, இவ் வதிகாரத்துப் புணர்க்கப்படா மொழிகள் இவையென அவற்றை எடுத்து உணர்த்துகின்றது. உயிரும் புள்ளியும் இறுதியாகி குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி நெறிப்பட வாரா குறைச் சொல் கிளவியும் - உயிரெழுத்தும் புள்ளியெழுத்தும் ஈறாகிக் குறிப்பின் கண்ணும் பண்பின்கண்ணும் இசையின்கண்ணும் தோன்றி ஒரு நெறிப்பட வாராக் குறைச்சொற்களாகிய உரிச்சொற்களும், உயர்திணை அஃறிணை ஆ இரு மருங்கின் ஐம்பால் அறியும் பண்புதொகு மொழியும் - உயர்திணை அஃறிணையாகிய அவ்விரண்டு திணையிடத்தும் உளவாய ஐந்து பாலினையும் அறியவரும் பண்புத்தொகை மொழிகளும், செய்யும் செய்த என்னும் கிளவியின் மெய் ஒருங்கு இயலும் தொழில் தொகு மொழியும் - செய்யும் செய்த என்னும் பெயரெச்சச் சொற்களின்படி ஒருங்கு நடக்கும் வினைச்சொல் தொக்க வினைத்தொகையும், தம் இயல் கிளப்பின் - (எண்கள்) தம் இயல்பு கிளக்கும் இடத்து, தம்முன் தாம் வரும் எண்ணின் தொகுதி உளப்பட பிறவும் அன்னவை எல்லாம் - (நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியுமாய் வாராது) தம்முன் தாம் வரும் எண்ணின் தொகுதியும் உட்பட்ட பிறவும் அத்தன்மையெல்லாம், மருவின் பாத்திய - வழக்கிடத்து மருவி நடந்த இடத்துள்ளன, (ஆகலான் அவ்வாறே கொள்ளப்படும்) புணர் இயல் நிலையிடை உணரத் தோன்றா - புணர்ச்சி இயன்ற நிலைமைக்கண் (அவற்றின் முடிபு ) விளங்கத் தோன்றா. எ - டு : விண் வினைத்தது, கார் கறுத்தது, ஒல்லொலித்தது; இவை குறைச்சொற்கிளவி ஆயினமையின் முடிக்கப்படாவாயின; விண்ணென விசைத்ததென இடைச் சொல்லோடு கூடியவழிப் புணர்க்கப்படும். கருஞ்சான்றான் என்றது பணபுத் தொகை, இது கரும் எனப் பண்புணர நின்றது. கருஞ்சான்றானெனத் தொகையாயவழி, கருமென்பது கரியானெனப் பால்காட்டி நிற்றலில் புணர்க்கப்படாதாயிற்று. கொல்யானை என்றது வினைத்தொகை. அதுவும் கொல்லெனத் தொழின்மை உணர நின்றது. கொல்யானை எனத் தொகையாயவழி, கொன்ற எனக் காலம்காட்டி நின்றமையின், புணர்க்கப்படாதாயிற்று. ஓரொன்று என இது, தம்முற்றாம் வந்த எண், இது நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் அண்மையிற் புணர்க்கப்படாதாயிற்று. இதுதானே ஓரொன்றாகக் கொடு என்புழிப் புணர்க்கப்படும். " பிறவும் " என்றதனான் முடியாதன உண்டான், கரியன் என்பன, இவை உண் எனவும் கருமை எனவும் பிரித்து நிறுத்தியவழி ஆனும் அன்னும் குறித்துவருகிளவி யன்மையான் வந்து புணராமையின், புணர்க்கப்படாவாயின. " தோன்றி " என்றதனால், கொள்ளெனக் கொண்டான் என்புழிக் கொள்ளென்பதனை, என என்பதனோடு புணர்க்கப்படாமை கொள்க. ` மெய் ஒருங்கியலும் ' என்றதனான், உண்டான். என்புழிச் செய்கையும் காலமும் பாலும் தோற்றி நிற்குமாறு பிரித்துப் புணர்க்கப்படாமை கொள்க. (76)
|