6. அதிகாரப் புறனடை

எழுத்ததிகாரத்திற்குப் புறனடை

483.கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்
வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்
வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்
நன்மதி நாட்டத் தென்மனார் புலவர்.

இஃது, இவ் வதிகாரப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

கிளந்த அல்ல செய்யுள்ளுள் திரிநவும் - முன் எடுத்தோதின அல்லாதன செய்யுளிடத்து வேறுபட வருவன வற்றையும், வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும் - வழக்கு நடத்துமிடத்து மருவுதலோடு வேறுபட வருவனவற்றையும், விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் - முன்சொன்ன முடிபியற்கையின், வேறுபடத் தோன்றின், நல்மதி நாட்டத்து வழங்கு இயல் மருங்கின் உணர்த்தனர். ஒழுக்கல் நல்லறிவினது ஆராய்ச்சியான் வழக்கு இயலுமிடத்து அவற்றின் முடிபு வேறுபாடுகளை யறிந்து நடத்துக, என்மனார் புலவர் - என்று சொல்லுவர் புலவர்.

எ - டு : நறவங்கண்ணி, கள்ளியங்கோடு, புன்னையங்கானல், பொன்னந்திகிரி, ஆரங்கண்ணி, கானலம்பெருந்துறை என இவை வேற்றுமைக்கண் அம்முப் பெற்று முடிந்தன.

" வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை " என்பது ரகர வீறு அத்துப்பெற்று முடிந்தது. முளவமா, பிணவுநாய் என்பன. அல்வழிக்கண் மென்கணத்துக் குறியதன் இறுதிச் சினை கெட்டு உகரம் பெற்று முடிந்தன.

" அஞ்செவி நிறைய மந்திரங் கூறி " என்பது அகம் என்னும் நிலைமொழி செவி என்னும் வருமொழியோடு வேறுபட முடிந்தது.

` ஆயிடை ' என்பது அவ்வென்னும் வகரவீறு வேறுபட முடிந்தது.

தடவுத்திரை, தடவுத்தோள் என்பன உரிச்சொல் முடிபு.

அருமருந்தன்னான் எனற்பாலது அருமருந்தான் என மரூஉவாய் முடிந்தது. சோணாடு மலாடு என்பதும் அது.

பொதியி லென்பதும் அது. பிறவும் அன்ன.

(77)
ஒன்பதாவது குற்றியலுகரப் புணரியல் முற்றிற்று.

எழுத்ததிகாரம் இளம்பூரணருரை முற்றுப்பெற்றது