மொழி மரபு

4. எழுத்துக்களின் இயக்கம்

குறிற்கீழ் ஒற்றாகா மெய்கள்

49.அவற்றுள்,
ரகார ழகாரங் குற்றொற் றாகா1

இஃது, ரகார ழகாரங்கட்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று.

அவற்றுள் - மேற் கூறப்பட்ட மூன்றனுள்ளும் , ரகாரம் ழகாரம் குற்று ஒற்று ஆகா - ரகாரமும் ழகாரமும் குறிற் கீழ் ஒற்றாகா.

அவை நெடிற்கீழ் ஒற்றாம் ; குறிற்கீழ் உயிர்மெய்யாம்.

எ - டு: தார், தாழ் என நெடிற்கீழ் ஒற்றாய் நின்றன , கரு, மழு எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் நின்றன.

இவ்வாறு விலக்கினமையின் : யகரம் பொய் எனவும் நோய் எனவும் இரண்டிடத்தும் ஒற்றாயிற்று , குற்றொற்று என்பது குறிதாகிய ஒற்று எனப் பண்புத்தொகை . குறிற்கீழ் நிற்றலான் , குறியது எனப்பட்டது . ஈண்டுக் குறில் நெடில் என்கின்றது மொழிமுதல் எழுத்தினை என உணர்க . இது மேல் வரையறை இல எனப்பட்ட உயிரும் மெய்யும் மயங்கும் மயக்கத்திற்கு ஓர் வரையறை கண்டு கூறினவாறு .

(16)

1. ஈண்டுக் குற்று என்றது , தனிக் குறிலை.