மொழி மரபு

4. எழுத்துக்களின் இயக்கம்

தொடர்மொழி இயல்பு

50.குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்
தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல.

குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின் - உயிரெழுத்திற்குக் குறுமையும் நெடுமையும் அளவிற் கொள்ளப்படுதலில் , தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல - தொடர் மொழிக்கீழ் நின்ற ரகார ழகாரங்களெல்லாம் நெடிற் கீழ் நின்ற ரகார ழகாரங்களின் இயல்பையுடைய (என்று கொள்ளப்படும்.)

எ - டு: அகர், புகர், அகழ், புகழ் எனக் கொள்க.

`புலவர்' என்றாற்போல இரண்டு மாத்திரையை இறந்ததன் பின்னும் வருமாலெனின் , அவையும் "தன்னின முடித்தல்" என்பதனால் நெடிற்கீழ் ஒற்று எனப்படும் . எல்லாம் என்றதனான் ரகார ழகாரங் களேயன்றி பிற ஒற்றுக்களும் `நெடிற்கீழ் ஒற்று' எனப்படும் . இதனானே, விரல் தீது என்புழி லகரம் `நெடிற்கீழ் ஒற்று' என்று கெடுக்கப்படும்.

(17)