மொழி மரபு

4. எழுத்துக்களின் இயக்கம்

செய்யுளில் ஈரொற்றிலக்கணம்

51.செய்யுள் இறுதிப் போலும்1 மொழிவயின்
னகார மகாரம் ஈரொற் றாகும்.

இஃது, செய்யுட்கண் ஈரொற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

செய்யுள் இறுதி போலும் மொழிவயின் - செய்யுள் இறுதிக்கண் `போலும்' என்னும் மொழிக்கண் னகாரம் மகாரம் ஈர் ஒற்று ஆகும் - னகாரமும் மகாரமும் வந்து ஈரொற்று உடனிலையாய் நிற்கும்.

எ - டு: "எம்மோடு தம்மைப் பொரூஉங்காற் பொன்னொடு , கூவிளம் பூத்தது போன்ம்" என வரும் .

(18)

1. போலும் என்னும் சொல் , உயிர்போலுங் கேளிர் என இடையில் நிற்பின் பெயரெச்சமும், மீகானும் போலும் - மீகானும் போன்ம் என இறுதியில் நிற்பின் வினைமுற்றும் ஆகும் (பாவாணர்)

(18)