மொழி மரபு

4. எழுத்துக்களின் இயக்கம்

மொழிக்கண்ணும் மாத்திரை வேறுபடாமை

53.மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும்
எழுத்தியல் திரியா என்மனார் புலவர்.

இஃது, எழுத்துக்கட்கு மொழிக்கண் மாத்திரை காரணமாகப் பிறப்பதோர் ஐயம் தீர்த்தல் நுதலிற்று.

மொழிப்படுத்து இசைப்பினும் - மொழிக்கண் படுத்துச் சொல்லினும் , தெரிந்து வேறு இசைப்பினும் - தெரிந்து கொண்டு வேறே சொல்லினும் , எழுத்து இயல் திரியா என்மனார் புலவர் - உயிரும் மெய்யுமாகிய எழுத்துக்கள் (பெருக்கம் சுருக்கம் உடையனபோன்று இசைப்பினும்) தத்தம் மாத்திரை இயல்பில் திரியா என்று சொல்லுவர் புலவர்.

எ - டு: அஃகல் அ எனவும், ஆல் ஆ எனவும், கடல் க எனவும், கால் கா எனவும் கண்டுகொள்க.

வேறு என்றதனான் , எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக்கண்ணும் எழுத்தியல் திரியா வென்பது கொள்க.

(20)