மொழி மரபு

5. போலி

ஐ ஒள குறுகுதல்

57.ஓரள பாகும் இடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயி னான.

இஃது , என் நுதலிற்றோ வெனின் , உயிர்களுள் ஒன்றற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுதல் நுதலிற்று.

தேருங்காலை மொழிவயின் ஓர் அளபு ஆகும் இடனும் உண்டு - ஐகாரம் ஆராயுங்காலத்து மொழிக்கண் ஓர் அளபாய் நிற்கும் இடமும் உண்டு.

எ - டு: இடையன் , மடையன் என வரும்.

தேருங்காலை என்றதனான் முதற்கண் சுருங்காதென்பது கொள்க இடன் என்றதனான் இக் குறுக்கம் சிறுபான்மை யென்பது கொள்க.

(24)