மொழி மரபு

6. மொழிமுதல் எழுத்துக்கள்

தனிமெய் மொழிமுத லாகாமை

60.உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா.

இஃது, [உயிர்] மெய்யெழுத்து மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா - உயிரோடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகா ; உயிரோடுகூடிய மெய்கள் மொழிக்கு முதலாம்.

ஈண்டு உயிர்மெய் யென்பது வேற்றுமை நயம் கருதி யென வுணர்க. ஈண்டு ஒற்றுமை கருதில்,

`கதந பமவெனு மாவைந் தெழுத்தும்
எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே'(மொழிமரபு - 28)

எனச் சூத்திரம் சுருங்க ஓதுவதன்றி , இதனாற் சொல்லப்பட்ட அறுபது உயிர்மெய்யினை எடுத்தோத வேண்டில் சூத்திரம் பரக்க வருமென்பது.