மொழி மரபு

6. மொழிமுதல் எழுத்துக்கள்

பன்னீருயிருடன் மொழிமுதலாதல்

61.கதந பமஎனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே.

இஃது, மேல் முதலாம் என்னப்பட்ட உயிர்மெய்கட்கு வரையறை கூறுதல் நுதலிற்று.

க த ந ப ம எனும் அ ஐந்து எழுத்தும்-க த ந ப ம என்று சொல்லப்பட்ட ஐந்து தனிமெய்யெழுத்தும் எல்லா உயிரொடும் முதல் செல்லும் - பன்னிரண்டு உயிரொடும் மொழிக்கு முதலாதற்குச் செல்லும்.

எ - டு: கலை, காளி, கிளி, கீரி, குடி, கூடு, கெண்டை, கேழல், கைதல், கொண்டல், கோடை, கௌவை, எனவும் ; தந்தை, தாடி, திற்றி, தீமை, துணி, தூணி, தெற்றி, தேவர், தையல், தொண்டை, தோடு, தௌவை எனவும் ; நடம், நாரை, நிலம், நீர், நுழை, நூல், நெய்தல், நேயம், நைகை, நொய்யன, நோக்கம், நௌவி, எனவும் ; படை, பாடி, பிடி, பீடம், புகழ், பூமி, பெடை, பேடி, பைதல், பொன், போதகம், பௌவம், எனவும் ; மடம், மாலை, மிடறு, மீனம், முகம், மூதூர், மெலிந்தது, மேனி, மையல், மொழி, மோதகம், மௌவல் எனவும் வரும்.

`முதற்கு' என்பதன் நான்காம் உருபு விகாரத்தாற் றொக்கது.

(28)