மொழி மரபு

6. மொழிமுதல் எழுத்துக்கள்

சகரமெய் ஒன்பதுயிருடன் மொழிமுதலாதல்

62.சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அ ஐ ஒள எனும் மூன்றலங் கடையே.1

இதுவும் அது .

சகரக் கிளவியும் அவற்று ஓர் அற்று - சகரமாகிய எழுத்தும் மேற்சொல்லப்பட்டவைபோல எல்லா உயிரோடும் மொழிக்கு முதலாம் ; அ ஐ ஒள எனும் மூன்று அலங்கடை - அ ஐ ஒள என்னும் மூன்றும் அல்லாவிடத்து.

எ - டு: சாலை, சிலை, சீறுக, சுரும்பு, சூழ்க, செய்கை, சேவடி, சொறிக, சோறு என வரும்.

சகடம் எனவும், சையம் எனவும் விலக்கினவும் வருமாலெனின் அவற்றுள் ஆரியச்சிதை வல்லாதன `கடிசொல் லில்லை' என்பதனாற் கொள்க.

(29)

1.சகரம் மொழிமுதல் வாராதென்று கூறுவது தமிழுக்குச் சற்றும் பொருந்தாது . "அ ஐ ஒள எனும் மூன்றலங் கடையே" என்னும் நூற்பா அடிக்கு அவை ஒள என்னும் ஒன்றலங்கடையே என்ற பாடவேறுபாடும் உள்ளது. சக்கட்டி, சக்கை, சகடு, சகதி, சங்கு, சட்டென, சட்டம், சட்டகம், சட்டி, சட்டை, சடசட, சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சணல், சதுப்பு, சப்பட்டை, சப்பென்று, சப்பாணி, சப்பு, சப்பை, சம்பு, சம்மட்டி, சமட்டு, சமம், சமழ், சமை, சரடு, சரள், சரி, சருகு, சருச்சரை, சரேல் என, சல்லடை, சல்லரி, சல்லி, சலசல, சலங்கை, சலி, சவ்வு, சவம், சவர், சவை, சளி, சளக்கென சழக்கு, சள்ளென, சள்ளை, சளை, சற்று, சறுக்கு, சன்னம், முதலிய நூற்றுக்கு மேற்பட்ட தனித்தமிழ்ச் சொற்கள் அடிப்படையானவும் தொன்று தொட்டனவும் இன்றியமையாதனவும் வேரூன்றினவும் சேரி வழக்கினவுமாயிருக்க, அவற்றைப் பிற்காலத்தனவென்று கொள்ளுவது பெருந்தவறாகும். சக்கை, சட்டி, சண்டு, சண்டை, சதை, சப்பு, சவி, சற்று, சறுக்கு முதலிய சொற்கள் எத்துணை எளிமையும் இயல்புமானவை என்பது சொல்லாமலே விளங்கும். சண்டு, சருகு முதலிய சில சொற்கள் பண்டு சகர முதலனவாயிருந்திருத்தல் கூடுமெனினும், சக்கு, சடார், சடேர், சரட்டு, சலசல, சரேல், சவ்வு, சளக்கு, சளார், சள் முதலிய ஒலிக்குறிப்புச் சொற்களும் அவற்றினடிப் பிறந்தனவும் துவக்கந்தொட்டுச் சகர முதலனவாயே இருந்திருத்தல் வேண்டும். சாப்பிடு என்னும் உலக வழக்கெளிமைச்சொல் சப்பு என்னும் மூலத்தினின்றே தோன்றியதாகும். சப்பு + இடு = சப்பிடு - சாப்பிடு. சுவை என்னும் சொல்லும் சவை என்பதன் திரிபாகவே தோன்றுகின்றது. செத்தான் என்னும் இறந்தகால வினைமுற்று பண்டைக் காலத்தில் சத்தான் என்றே இருந்திருத்தல் வேண்டும். ஒ. நோ : காண்-கண்டான், நோ - நொந்தான். நெடின் முதலான வினைப்பகுதி இறந்தகாலமுற்றில் முதல் குறுகும்போது இனக்குறிலாய்க் குறுகுவதே மரபு ; தெலுங்கிலும் சச்சினாடு (செத்தான்) சச்சிப்போயினாடு (செத்துப்போனான் ) என்றே சொல்வர். மேலும் `முழுமுதல் அரணமும் வருபகை பேணார் ஆரெயிலும்' அமைத்துக்கொண்ட தொல்காப்பியர் காலத் தமிழர் சட்டி செய்யத்தெரியாதிருந்தனர் என்பது பெருநகைக் கிடமானதாகும். சட்டி என்பது சமையலுக்கு இன்றியமையாததும் எளிநிலையானதும் மறுபெயரற்துமான கலவகை.

"சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி
சளிசகடு சட்டை சவளி - சவிசரடு
சந்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும்
வந்தனவாற் சம்முதலும் வை"

என்பது நன்னூல் மயிலைநாதருரை மேற்கோள். (பாவாணர்)