மொழி மரபு

6. மொழிமுதல் எழுத்துக்கள்

வகரமெய் எட்டுயிருடன் மொழிமுதலாதல்

63.உ ஊ ஒ ஓ என்னும் நான்குயிர்
வ என் எழுத்தொடு வருத லில்லை.

இதுவும் அது

உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் - உ ஊ ஒ ஓ என்று சொல்லப்படுகின்ற நான்கு உயிரும், வ என் எழுத்தோடு வருதல் இல்லை-வ என்னும் மெய்யெழுத்தோடு மொழி முதலில் வருதலில்லை.

பிற உயிர்கள் வரும்.

எ - டு: வளை, வாளி, விளரி, வீடு, வெள்ளி, வேர், வையம், வௌவு எனவரும்.

(30)