மொழி மரபு

6. மொழிமுதல் எழுத்துக்கள்

ஞகரமெய் மூன்றுயிருடன் மொழிமுதலாதல்.

64.ஆ எ
ஒ எனும் மூவுயிர் ஞகாரத் துரிய.

இதுவும் அது.

ஆ எ ஒ என்னும் மூ உயிர் ஞகாரத்து உரிய-ஆ எ ஒ என்று சொல்லப்படும் மூவுயிர்கள் ஞகார ஒற்றோடு முதலாதற்கு உரிய பிற உரியவல்ல.

எ - டு: ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று எனவரும்.

எ - டு: ஞழியிற்று என்றாற்போல்வன விலக்கினவும் வருமாலெனின், அவை1 அழிவழக்கென்று மறுக்க.

(31)

1. (பாடம்) இழிவழக்கு.