இஃது, மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. முதலா ஏன - மொழிக்கு முதலாகாத ஒழிந்த மெய்களும், தம் பெயர் முதலும்-(அவ்வெழுத்துக்கள்) தம் பெயர் கூறுதற்கு முதலாம். முதலாயின மெய் கதநபமக்களும், வகரமும், சகரமும், ஞகரமும், யகரமும் என இவை. முதலாகாத மெய் ஙகரமும், டகரமும், ணகரமும், ரகரமும், லகரமும், ழகரமும், ளகரமும், றகரமும், னகரமும் என இவை. எ - டு: அவை தம் பெயர்க்கு முதலாமாறு- ஙக்களைந்தார், டப்பெரிது, ணந்நன்று என்றாற்போல ஒட்டிக்கொள்க. இனி `ஏன ' என்றதனான், முதலாம் என்னப்பட்ட ஒன்பது உயிர்மெய்யும் பன்னிரண்டு உயிரும் தம்பெயர் கூறும்வழியும் மொழிக்கு முதலாம் எனக்கொள்க. கக்களைந்தார், தப்பெரிது, அக்குறிது, ஆவலிது என்றாற் போல ஒட்டிக்கொள்க. (33)
|