இஃது, உயிர்மொழிக்குஈறாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உயிர் ஒள எஞ்சிய இறுதி ஆகும்-உயிரெழுத்துக்களுள் ஒளகாரம் ஒழிந்தவை மொழிக்கு ஈறாம்; ஒளகாரந்தான் ஈறாகாது. இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது. எ - டு: ஆஅ, ஆ, ஈஇ, ஈ, ஊஉ, ஊ, ஏஎ, ஏ, ஐஇ, ஐ, ஓஒ, ஓ என உயிர் ஈறாயின இவற்றுட் குற்றெழுத்தைந்தும் அளபெடை வகையான் ஈறாயின. உயிர்மெய்களும் மேல் வரையறை கூறாதனவாகிய அகர ஆகார இகர ஈகார ஐகாரங்களோடு இயைந்தன ஈண்டே கொள்க. எ - டு: விள, பலா, கிளி, குரி, பனை என வரும். (36)
|