நூன்மரபு

2. மாத்திரை

மாத்திரைக்கு அளபு

7.கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே.

இஃது, அம் மாத்திரையிலக்கணம் கூறுதல் நுதலிற்று.

கண்ணிமை நொடி என அவ் மாத்திரை-கண்ணிமையும் நொடியுமாகிய அவை மாத்திரைக்கு அளபு, நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறு-(இது) நுண்ணிதாக நூலிலக்கணத்தினை உணர்ந்த ஆசிரியர் கண்ட நெறி.

இமையென்றது, இமைத்தற்றொழிலை, நொடியென்றது, நொடியிற்பிறந்த ஓசையை.தன் குறிப்பு இன்றி நிகழ்தலின், இமை முன் கூறப்பட்டது நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல்,நெறித்தளத்தல், 1தேங்க முகந்தளத்தல், சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் என ஏழுவகைய என்னும் அளவினுள், இது சார்த்தியளத்தல். `நுண்ணிதினுணர்ந்தோர் கண்டவாறு' என்றதனான் நாலுழக்குக் கொண்டது நாழியென்றாற்போல,அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக.2

(7)

1. நச். தெறித்தளத்தலென்ப.

2. "முடிந்தது காட்டலென்னும் உத்தி. ஆணை கூறலுமாம் நொடியிற் கண்ணிமை சிறப்புடைத்து; உள்ளத்தான் நினைத்து நிகழாமையின்."