7. மொழியிறுதி எழுத்துக்கள்

ஒள ஈறாகும் இடம்

70.கவவோ டியையின் ஒளவு மாகும்.

இஃது, ஈறாகா தென்ற ஒளகாரம் இன்னுழி ஆம் என்கின்றது.

க வ ஓடு இயையின்-ககர வகரமாகிய மெய்களோடு பொருந்தின், ஒளவும் ஆகும்- முன் ஈறாகா தென்ற ஒளகாரமும் ஈறாம்.

எ - டு: கௌ, வௌ, என வரும்.1

(37)

1. எனவே ஒழிந்த உயிரெல்லாம் தாமே நின்றும் பதினெட்டு மெய்களோடுங் கூடிநின்றும் ஈறுதல் பெற்றாம். இதனானே ஒளகாரம் ஏனை மெய்க்கண் வாராதென விலக்குதலும் பெற்றாம். உயிர் நுகரத்தோடு கூடி மொழிக்கு ஈறாமென்பது இதனால் எய்திற்றேனும் அது மொழிக்கு ஈறாகாமை தந்துபுணர்ந் துரைத்தலான் உணர்க. 2இது வரையறை கூறிற்று (நச்).

2. தந்து புணர்ந்துரைத்தல் உள்பொருளல்லதனை உள போலத் தந்து கூட உணர்த்தல். இங்கு,உயிர்ஙகரத்தோடு கூடி மொழிக்கு ஈறாவதுபோலக் கூறியது தந்து புணர்ந்துரைத்தல்.

(பாவாணர்)