7. மொழியிறுதி எழுத்துக்கள்

உ ஊ நகர வகரங்களுடன் ஈறாகாமை

74.உ, ஊகாரம் நவவொடு நவிலா.

இதுவும் வரையறை.

உ, ஊகாரம் நவ ஒடு நவிலா - உ ஊகாரங்கள் (தாமே நின்றும் பிற மெய்களோடு நின்றும் பயில்வதன்றி) நகர வகரங்களோடு பயிலா.

தாமே ஈறாதல் மேலே காட்டப்பட்டன. பிற மெய்களோடு ஈறாமவற்றுள், வழக்கிறந்தனவல்லாதன வந்தவழிக் கண்டு கொள்க. `நவிலா' என்றதனாற் சிறுபான்மை நொவ்வும் கவ்வும் என (உகரம்) வகாரத்தோடு ஈறாதல் கொள்க. இன்னும் இதனானே சிறுபான்மை நகரத்தோடு வரவு உண்டேனும் கொள்க.1

(41)

1. நகரம் பொருந் என வினைப் பெயராகியும் நா நீ நே எனப் பெயராகியும் நை நொ நோ என வியங்கோளாகியும் வரும். பொருநை என்றுங் காட்டுப. வகரம் உவவே எனவே வியங்கோளாயும் உவா செவ்வி வீ வை எனப் பெயராயும் வரும். ஒருவ ஒருவா ஒருவி ஒருவீ ஒளவை என்றுங் காட்டுப. ஈண்டு விலக்காத ஏனை யுயிர்களோடு வந்த நகர வகரங்கள் அக்காலத்து வழங்கினவென்று கோடும், இவ்விதியால் இனி நவிலா என்றதனானே வகரவுகரம் கதவு துரவு குவவு நுணர்வு நுகர்வு நொவ்வு கவ்வு எனப் பயின்று வருதலுங் கொள்க.