7. மொழியிறுதி எழுத்துக்கள்

பகர வுகரம் ஒருமொழிக்கே ஈறாதல்

76.உப்ப காரம் ஒன்றென மொழிப
இருவயி னிலையும் பொருட்டா கும்மே.

இதுவும் மொழிவரையறையும் மொழியது பொருள்பாடும் உணர்த்துதல் நுதலிற்று.

உப்பகாரம் ஒன்று என மொழிப - உகரத்தோடு கூடிய பகரம் ஒரு மொழிக்கு ஈறாம் என்று சொல்லுவர். இருவயின் நிலையும் பொருட்டு ஆகும் - அதுதான் தன்வினை பிறவினை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத்தாம்.

எ - டு: தபு என வரும், இது படுத்துச்சொல்ல, நீ சா எனத் தன்வினையாம் எடுத்துச்சொல்ல, நீ ஒன்றனைச் சாவி எனப் பிற வினையாம்.1

(43)

1. இதனால், ஆங்கிலத்திற் போலப் பண்டைத் தமிழிலும் அசையழுத்தம் (accent) ஒரு சொல்லின் வகையையும் பொருளையும் வேறுபடுத்திற்றென்பதை அறியலாம். (பாவாணர்)