7. மொழியிறுதி எழுத்துக்கள்

மொழியீறாம் மெய்கள்

78.ஞணநம னயரல வழள வென்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி.

இஃது, தனிமெய்களுள் மொழிக்கு ஈறாவன கூறுதல் நுதலிற்று.

ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் அப்பதினொன்றே - ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்று கூறப்பட்ட அப்பதினொன்றுமே, புள்ளி இறுதி - புள்ளிகளில் மொழிக்கு ஈறாவன.

எ - டு: உரிஞ், மண், பொருந்,திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள் என வரும். னகாரத்தை ஈற்று வையாது, மகரத்தோடு வைத்தது அதன் 1மயக்க இயைபு நோக்கி என்றுணர்க.

(45)

1. வழக்குப் பயிற்சியும் மயக்க இயைபும் நோக்கி.

(நச்.)